எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பெரிய பள்ளியில் இயங்கும் குர்ஆன் அகடமி பயிலுனர்களுக்கான விசேட கிராஅத் பயிற்சி முகாம் அண்மையில் புத்தளம் முள்ளிபுரம் மஸ்ஜித் அல்-அமீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
அல்முஜாஸ், அல்ஹாபிழ் ஹஸீம் முஹம்மத் இர்பான் காரியினால் நடத்தப்படும் கிராஅத் பயில் நெறியானது ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் நடைபெறுகின்றது.
கிராஅத் கேம்ப் பயிற்சி முகாம் இப்பயில் நெறியின் விசேட அமர்வாக இடம்பெற்றது.
முதலாவது அமர்வில், உலமாக்களான
எஸ்.எம். ரசூல் (இஹ்சானி), ஏ.டபில்யூ.அப்துல்லா (ஹஸனி), எஸ்.எம்.ஷபீக் (காஷிபி),ஏ.எம். ஷாகிர் (ரஷீதி) ஆகியோர் பயிலுனர்களை சிறு குழுக்களாக பிரித்து பயிற்சிகளை வழங்கினார்கள்.
இதன்போது ஒவ்வொரு பயிலுனர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தி கற்பிக்கப்பட்டது.
இரண்டாம் அமர்வாக, மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து உஸ்தாத் ஹஸீம் முஹம்மத் இர்பான் காரி அவர்கள் சூரா பாத்திஹா ‘தப்ஸீருல் லப்லி’ ஒவ்வொரு சொல்லுக்குமான விளக்கவுரையை நிகழ்த்தினார்.
மஸ்ஜித் அல்-அமீன் நிருவாக சபை தலைவர் ரியாஸ்தீன், “இதுபோன்ற நிகழ்வுகளை அல்-அமீன் பள்ளிவாசலில் நடத்துமாறு கோரியதுடன் அதற்கான ஒத்துழைப்புக்களை அல்-அமீன் பள்ளிவாசல் நிருவாகமும் முள்ளிபுரம் அல்-அமீன்புரம் மக்களும் வழங்குவதற்கு விருப்பத்துடன் தயாராக இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
வாலிபர்கள் வளர்ந்தவர்கள் புனித குர்ஆனை தர்தீலாக ஓதுவதைப் பயில்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களின் ஒத்துழைப்புக்களினால் சிறப்பாக நடைபெறும் குர்ஆன் அகடமியில் இணைந்து புனித குர்ஆனை தர்தீலாக ஓதுவதற்கு கற்றுக்கொள்ள முன்வருமாறு அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.



