1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கே யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு,வவுனியாவின் ஒரு பகுதி, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 75,000 முஸ்லிம்கள் தமது பூர்வீக மண்ணிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிப்பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை, இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு அத்தியாயம். 2026 ஒக்டோபர் 27 இல் அதன் 36வது ஆண்டு நினைவை நாம் அனுஸ்டிக்கும் போது, அவர்களின் வலிகளை வரலாறாக பதிவு செய்வது எனது கடமை.
சகோதரத்துவத்தின் பூமி
வெளியேற்றத்திற்கு முன் வட மாகாண முஸ்லிம்களின் வாழ்க்கை நிம்மதியானதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் நகை வியாபாரிகளாகவும், துணிக்கடை உரிமையாளர்களாகவும், மன்னாரில் மீனவர்களாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவில் விவசாயிகளாகவும் வாழ்ந்தனர். அவர்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு, தமிழ் சகோதரர்களுடன் பள்ளிவாசலும் கோவிலும் அருகருகே இருக்கும் அளவிற்கு சகோதரத்துவமாக வாழ்ந்தனர். தமக்கென சொந்த வீடு, காணி, கடை, தென்னந்தோப்புகள் என பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்றிருந்தனர். 'அகதி' என்ற சொல் அவர்களின் அகராதியில் இருக்கவில்லை.
1990 அக்டோபர் 22ம் திகதி சாவகச்சேரியில் ஆரம்பித்து, அக்டோபர் 30ம் திகதி முழு வடமாகாணம் வரை இந்த வெளியேற்றம் கட்டம் கட்டமாக நடந்தது. பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது: "முஸ்லிம்கள் அனைவரும் 48 மணித்தியாலத்திற்குள், சில இடங்களில் 2 மணித்தியாலத்திற்குள் வெளியேற வேண்டும். 500 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது."
மக்கள் தமது வீடு, நிலம், நகை, கடைகள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெறும் உடுத்திய உடையுடன் வெளியேற்றப்பட்டனர். பள்ளிவாசல்களிலும், பாடசாலைகளிலும் ஒன்று கூட்டப்பட்டு, பெண்களின் காதணிகள், கழுத்து நகைகள் கூட பறிக்கப்பட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. அன்று அவர்கள் இழந்த சொத்துக்களின் பெறுமதி பல கோடி ரூபாய்கள். முஸ்லீம்களை பாதுகாக்க,அவர்களை யுத்தகளத்தில் காப்பாற்ற,துன்பியல் சம்பவமாக போன்ற காரணங்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகளால் கூறப்பட்டாலும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கொண்ட மோகத்தின் காரணமாகவே அந்த நாசகார வரலாற்று தவறை அவர்கள் செய்தார்கள்.
இல்லையென்றால் வெறும் 500/= வுடன் அனுப்ப அவர்களுக்கு எண்ணம் வந்திருக்காது.
வெளியேற்றப்பட்ட மக்கள் தரை வழியாகவும், பெரும்பாலானோர் கடல் வழியாகவும் புத்தளத்தை நோக்கி வந்தனர். மன்னார் கடல் வழியாக சிறிய தோணிகளில், தலைக்கு மேல் மூட்டைகளுடன், நூற்றுக்கணக்கானோர் நெருக்கி அடித்து ஏற்றப்பட்டனர். குடிக்க தண்ணீர் இல்லை, குழந்தைகளுக்கு பால் இல்லை, கடலில் 2 முதல் 3 நாட்கள் பயணம்.
கர்ப்பிணி பெண்கள் படகிலேயே பிரசவித்த கொடுமையும், குழந்தைகள் மயங்கி விழுந்த அவலமும் நடந்தது. இந்த மரணப் பயணத்தில் உயிர் தப்பி கல்பிட்டி கரையை அடைந்த போது, அவர்களை வரவேற்று அரவணைத்தது கல்பிட்டி மீனவ சமூகம். கல்பிட்டி மக்கள் தமது வீடுகளையும், உணவையும் பகிர்ந்து கொடுத்த வரலாற்றை மறக்க முடியாது. கல்பிட்டி எமக்கு இரண்டாவது தாய்.
அந்த கெடுபிடியான காலத்திலும் கல்பிட்டியில் வாழ்ந்த எத்தனையோ படகு உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் எரிபொருள் நிரப்பி உயிரை பணயம் வைத்து மன்னாருக்கு சென்று அந்த மக்களை அக்கரையிலிருந்து இக்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.அவர்களில் நாறிய பலர் இன்று உயிருடன் இல்லை.வல்ல இறைவன் அவர்களுக்கு மேன்மையான வாழ்க்கையை கொடுக்க பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
கல்பிட்டி, புத்தளம், ஆனமடுவ, முந்தல் பகுதிகளில் தகர கொட்டகைகளால் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் இவர்களின் அடுத்த அத்தியாயம் ஆரம்பமானது. சொந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள், ஒரு கூடாரத்தில் 5, 6 பேர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அகதி முகாமிலேயே ஒரு தலைமுறை பிறந்து வளர்ந்தது. அவர்களின் பிறப்பு சான்றிதழில் "பிறந்த இடம் அகதி முகாம்" என்று பதிவானது. கல்வி தடைப்பட்டது, வாழ்வாதாரம் இழக்கப்பட்டது. இருந்தும் அவர்கள் தமது நம்பிக்கையை இழக்கவில்லை.
36 வருடங்களின் பின் இன்று வடக்கு முஸ்லிம்கள் புத்தளம், கல்பிட்டியில் வியாபாரம், மீன்பிடி, சிறு தொழில்கள் செய்து தன்னிறைவு அடைந்துள்ளனர். கல்வியில் இமயம் தொட்டு விட்டனர். தொன்னூறுகளின் முன்பு அபகரிக்கப்பட்ட வைத்தியக்கல்வி ,இன்று பல நூறு வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும் கணக்காய்வாளர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கி விட்டது.ஆனால் அவர்களின் மனதில் இன்னும் ஒரு வெற்றிடம் உள்ளது. அவர்கள் புத்தளத்தில் பூர்வீகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில் சங்கடப்படுகிறார்கள். வடக்கிலும் அவர்களின் இருப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தமது பூர்வீக ஊரான யாழ்ப்பாணத்தையும், மன்னாரையும் பார்க்க சுற்றுலா பயணிகள் போல சென்று வருகின்றனர்.அவர்களுக்கான சரியான தலைமைத்துவ வழிகாட்டல் இல்லை. நம்பிக்கையான அரசியல் தலைமைத்துவம் கிடைக்கவில்லை. சௌகரிய வாழ்வு பறிக்கப்பட்ட உணர்வு. நிருவாகம் பயங்கரவாதம் பேனா முனையில் எச்சரிக்கிறது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் 10 வீதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது. காரணங்கள்: காணி ஆக்கிரமிப்பு, வீடுகள் அழிக்கப்பட்டமை, உறுதி ஆவணங்கள் தொலைந்தமை, அரசியல் அக்கறையின்மை. திட்டமிடப்படாத மீள்குடியேற்ற அழைப்பு,இன்றும் அடிப்படை வசதிகளற்ற வாழ்வு ,தங்களின் வாரிசுகளின் கல்வி, எதிர்காலம் தொழில் எனப்பல காரணங்கள் உண்டு.
இன்றும் பல முதியவர்களின் சட்டைப் பைகளில் 1990ல் பூட்டிவிட்டு வந்த வீட்டின் சாவி இருக்கிறது. ஆனால் அந்த வீடு இருக்கிறதா? நாம் சொந்த மண் திரும்புவோமா? என்ற ஏக்கமும் இருக்கிறது.
வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது வெறும் இடம்பெயர்வு அல்ல, அது ஒரு இனத்தின் வேர்களை பிடுங்கி எறிந்த சம்பவம். 36 வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அவர்கள் கேட்பது பிச்சை அல்ல, தமது பூர்வீக மண்ணில் கௌரவமாக வாழும் உரிமை. இந்த வரலாறு மறக்கப்படக்கூடாது, மீண்டும் நிகழக்கூடாது.
வலிந்து அவர்களின் தலையில் கட்டப்பட்ட இந்த வாழ்க்கையை சீர் செய்வது இந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளின் கடமையாகும்.
A.S.Saahir. B.A. (Hon's)
displaced from mannar to kalpitiya.
2026/10/25.
