ஒன்பதாவது தொடர்......
1985 காரைதீவு – சாய்ந்தமருது வன்முறையின் தாக்கம் கல்முனையிலும் எதிரொலித்தது. அத்துடன் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் அவ்வப்போது பதட்டங்கள் நிலவியது.
கல்முனை அம்மன் கோவில் வீதியில் வசித்துவந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் வீடு உடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. இது காரைதீவு வன்முறையுடன் தொடர்புடையது.
1986 இல் கல்முனைப் பகுதியில் பல முஸ்லிம்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் எல்லை ஓரங்களில் வசித்துவந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தனர். அதற்கு பழிவாங்கும் நோக்கில் கல்முனை ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலயம் 10 August 1986 அன்று தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 1986 இல் கல்முனையில் அரசியல் பிரச்சினைக்கு அப்பால் வீடுகள், நிலங்கள் மற்றும் மதஸ்தளங்கள் தொடர்பான சமூகப் பிரிவினையாகவும் மாறியிருந்தது.
03.09.1987 அன்று மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முஹமெட் தமிழ் ஆயுத இயக்கம் ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் நிலவியது.
இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 09.09.1987 அன்று கல்முனை உட்பட கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையிலே ஹர்த்தால் நடைபெற்றது.
மறுநாள் 10.09.1987 காலை தமிழ் ஆயுத குழுக்களினால் கல்முனை நகரில் உள்ள முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதுடன், முஸ்லிம்களுக்கு சொந்தமான அரிசி ஆலைகள் மற்றும் வீடுகளும் தாக்கப்பட்டன. குறித்த ஆயுத தாரிகள் LTTE யினருடன் தொடர்புபட்டவர்கள் என்றும், சில இடங்களில் தமிழ் ஆயுதக் குழுக்கள் என்றும் கூறப்படுகின்றது.
இந்த வன்முறை சம்பவத்தினால் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் அன்றைய நாணயப் பெறுமதியில் 67 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
இந்திய அமைதிப் படையினர் நிலைகொண்டிருந்த காலத்திலேயே கல்முனை சம்பவம் நடைபெற்றதனை தடுக்க தவறியதனால் இந்தியப்படையினர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
கல்முனையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை நடவடிக்கையில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஈடுபடும்போது, சில மீட்டர் தூரத்தில் கல்முனை பொலிஸ் நிலையம் இருந்தது. ஆனால் வன்முறையை தடுப்பதற்கோ, வர்த்தக நிலையங்களை பாதுகாப்பதற்கோ அவர்கள் முற்படவில்லை. அத்துடன், இந்திய படையினர்களும் பாதுகாப்பு வழங்கவில்லை.
1985 க்கு பின்பு கிழக்கில் தமிழ் ஆயுத இயக்கங்களின் செயல்பாடுகள் அதிகரித்ததுடன், முஸ்லிம் பிரதேசங்களில் கப்பம், கடத்தல், கொள்ளை போன்ற அச்சுறுத்தல் காரணமாக நிராயுதபாணிகளான முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் அதிகரித்தது.
கல்முனை சம்பவத்துக்கு பின்பு மூதூர், ஓட்டமாவடி, காத்தான்குடி ஆகிய பகுதிகளிலும் தமிழ் – முஸ்லிம் பதட்டம் உருவானது. மஞ்சந்தொடுவாய் பகுதியில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாறி மாறி வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
1987 அக்டோபர் மாதம் மூதூர் பகுதியில் முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக பெருமளவான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தனர். இதன் தாக்கம் கல்முனை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல முஸ்லிம் பிரதேசங்களில் உணரப்பட்டது.
கல்முனையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமானது, வெறும் உள்ளூர் பிரதேச மோதலாக இல்லாமல், முழு கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமை பற்றிய விவாதமாக மாறியது.
மீண்டும் 26 March 1988 அன்று கல்முனையில் சுமார் 25 முஸ்லிம் கடைகள் தீவைக்கப்பட்டது. இதில் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் பெருமளவிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அரச படைகளையோ, இந்திய படைகளையோ நம்ப முடியாது என்ற மனோநிலை முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் வலுவடைந்ததுடன், தங்களது பாதுகாப்பினை தாங்களே மேற்கொள்ள வேண்டும் என்று அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆவேசப்பட்டனர். பாதுகாப்புக்காக ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
தொடரும்............
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
