JobVibe.lk - Sri Lanka Job Portal

திருகோணமலை ஈரானியக்கப்பல் மாலுமிகள் தொடர்பில் கேள்வியெழுப்பிய ரவூப் ஹக்கீம் - பதிலளித்த பிரதியமைச்சர்

நேற்று (செப்டம்பர் 11) பாராளுமன்ற அமர்வின் போது, திருகோணமலையில் தரித்து நிற்கும் ஈரானியக் கடற்படைக்குச்சொந்தமான  "புஷேர்" கப்பலிலுள்ள மாலுமிகளை மாற்றுவது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதியமைச்சரால் பதிலளிக்கப்பட்டது.

நான் இக்கேள்வியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு முன்வைக்கின்றேன். திருகோணமலையில் தற்போது தரித்து நிற்கும் ஈரானியக் கடற்படைக்குச்சொந்தமான "புஷேர்" (Bushehr) கப்பலிலுள்ள மூன்று ஈரானிய மாலுமிகளை மாற்றுவதற்காக ஒரு இராஜதந்திரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென்பது தெரியுமா? மேலும், அவர்களை மாற்றுவதற்காக ஈரானிலிருந்து புதிதாக மூன்று மாலுமிகளை அனுப்புவதற்குப் பாதுகாப்பமைச்சு அனுமதி வழங்கியுள்ளதென்பதும் தெரியுமா?

இயற்கையான சேவைத்தேவைகள், நீண்டகாலக் கடமையால் ஏற்பட்ட சோர்வு மற்றும் களைப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இம்மாற்றீடு எவ்விதத் தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். 

எனவே, தேவையான அனுமதியை வழங்குவதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையெனில், ஏன்?

இக்கேள்விக்குப் பதிலளிப்பதற்காகச் சமூகமளித்துள்ள பிரதி அமைச்சரின் கவனத்திற்கு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியாவிலும் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான இது போன்றதொரு கப்பலுள்ளது. 

அங்கு ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையை இந்திய அரசாங்கம் பரிசீலித்து, ஈரானிலிருந்து முப்பது மாலுமிகள் மாற்றப்பட்டுள்ளதுடன், அதற்கான முழு அனுமதியையும் இந்தியா வழங்கியுள்ளது.

தற்போது போர் நடைபெறுவதால் இதனை அனுமதிக்க முடியாதென்று சில 'பண்டிதர்கள்' கூற முற்படுவதாக எனக்குத்தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியா கடந்த ஆகஸ்ட் 25ம் திகதியன்று இதற்கு அனுமதியளித்துள்ளது. போர் மீண்டும் தொடங்கியிருந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 25ம் திகதியன்று அதனை அனுமதித்துள்ளனர்.

இத்தகைய கோரிக்கைகள் அமைதிக்காலத்தில் கூட விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எமது அரசாங்கமும், எமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், மாலுமிகளை மாற்றும் இந்த எளிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பாடுபடாமல் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

ஆரம்பத்தில் 13 மாலுமிகளை மாற்றுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பமைச்சு மூன்று பேரை மாற்றுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறாயினும், இளம் மாலுமிகள் தங்கள் வீடு திரும்புவதற்காகக் கவலையுடன் காத்திருக்கும் பெற்றோரின் நிலைமையை கருத்திற்கொண்டு, நட்பு நாடான ஈரானுடன் தேவையற்ற இராஜதந்திர மோதலைத்தவிர்ப்பதற்காக அரசாங்கம் தயவுசெய்து மேலும் தாமதமின்றி இதனைப்பரிசீலிக்குமா?

இதற்குப்பதிலளிக்கும் வகையில் வெளிநாட்டலுவல்கள் துறை சார்பாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிக்கூறினார்:

ரவூப் ஹக்கீம் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்னர், இவ்விவகாரத்தைப் பரந்த பின்னணியில் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கை, எமது நடைமுறையிலுள்ள முறைமைகள் மற்றும் தேசியப்பொறுப்புகளுக்கு இணங்கச் செயற்படும் அதேவேளையில், மனிதாபிமானக் காரணிகள், பொறுப்புணர்வு மற்றும் ஆக்கபூர்வமான இராஜதந்திர ஈடுபாடு ஆகியவற்றுடன் இவ்விசேட சூழ்நிலையைத் தொடக்கத்திலிருந்தே அணுகியுள்ளது.

தொடக்கம் முதலே, சம்பந்தப்பட்ட ஈரானியப் பணியாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கு அரசாங்கம் உரிய கவனஞ்செலுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களைக்கௌரவமான முறையில் தாய்நாட்டுக்கு அனுப்ப இலங்கை வசதி செய்துள்ளதுடன், 238 ஈரானிய மாலுமிகள் ஈரான் திரும்புவதற்கும் உதவி புரிந்துள்ளோம்.

பொருத்தமான இலங்கை அதிகாரிகளுக்கிடையே நெருங்கிய ஒருங்கிணைப்புடனும், ஈரானியத்தரப்புடன் கலந்தாலோசித்தும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவசியமான சூழல்களில் மனிதாபிமான உதவிகளை நீட்டிக்கும் இலங்கையின் நீண்டகால அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.

தொடர்புடைய இராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக்கட்டமைப்புகளூடாக எஞ்சிய விவகாரங்களை அரசாங்கம் தொடர்ந்தும் பேசி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மனிதாபிமானக்கருத்தீடுகள், இலங்கையின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சர்வதேசப்பொறுப்புகள் ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவமளிக்கப்படுகிறது.

அப்பின்னணியுடன் ரவூப் ஹக்கீம் எழுப்பிய குறிப்பிட்ட கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்கிறேன்.

பாதுகாப்பு அமைச்சின்படி, ஏனைய தரப்பினரின் முடிவுக்குட்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றத்திற்கு இலங்கை கடற்படை எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

தாமதமின்றி அவர்களை தாய்நாடு திரும்பச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து, ஈரானியக் கோரிக்கையை எளிதாக்குவதற்கான அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பதிலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்ட போது, மாலுமிகள் வீடு திரும்புவதற்காக அவர்களின் குடும்பங்கள் ஆவலுடன் காத்திருப்பதால், இதற்கான ஒரு காலக்கெடுவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஏனெனில் இவர்கள் நீண்டகாலமாகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் இளம் மாலுமிகளும்  பயிற்சிப்பணியாளர்களுமாவர்.

அமைச்சு மற்றும் அரசாங்கம் என்ற முறையில் உலகளாவிய தரநிலைகளுக்கிணங்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். மாலுமிகள் கூடிய விரைவில் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச்செல்வதை நாங்கள் உறுதி செய்வோம் எனப்பதிலளித்தார்.

(நிசப்தம்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال