JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகரின் "முதல் மேயர் வெற்றிக்கிண்ண காற்பந்தாட்ட தொடரில்" புத்தளம் போல்டன் கழகம் சம்பியன்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாநகர சபையின் ஏற்பாட்டில், புத்தளம் காற்பந்தாட்ட லீக்குடன் இணைந்து தொடராக நடாத்தப்பட்டு வந்த மேயர் கிண்ண காற்பந்தாட்ட தொடரில் புத்தளம நகரின் மிகப்பழைமை வாய்ந்த போல்டன் காற்பந்தாட்ட கழகம் சம்பியனாகியுள்ளது.

மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களது வழிகாட்டலில், புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தலைவர் முஹம்மது யமீன் உள்ளிட்ட நிறைவேற்று குழுவினரால் புத்தளம் நகரில் தொடராக நடாத்தப்பட்டு வந்த இந்த காற்பந்தாட்ட தொடரிலே மொத்தமாக லீக்கில் அங்கம் வகிக்கும் 12 அணிகள் பங்கேற்று இருந்தன.

பொயிண்ட்ஸ் கம் நொக்கவுட் போட்டி தொடரான இந்த போட்டிகள் பிரதி வெள்ளி, சனிக்கிழமைகளில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடாத்தப்பட்டு வந்தன.

இந்த போட்டி தொடரில் புத்தளம் நகரின் மிகப் பழைமை வாய்ந்த புத்தளம் போல்டன் கழகமும், நியூ ஸ்டார்ஸ் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இதன் பரபரப்பான இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (04) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் போல்டன் கழகம் 03 : 01 கோல்களினால் வெற்றி பெற்று சம்பியன் ஆகியதோடு இரண்டாம் இடத்தினை நியூ ஸ்டார்ஸ் கழகம் பெற்றுக்கொண்டது.தொடரின் மூன்றாம், நான்காம் இடங்களை நாகவில்லு எருக்கலம்பிட்டி, லிவர்பூல் அணிகள் பெற்றுக்கொண்டன.

புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் பிரதம அதிதிகளாக ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் ஆகியோர் கலந்து  சிறப்பித்தனர்.

புத்தளம் நகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிஸார், மாநகர சபை உறுப்பினர்களான இப்லால் அமீன், சஹ்ரான் தாஜுதீன், எச்.என்.எம்.சிபாக், எம்.எம்.எம்.முர்ஷித், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம், முன்னாள் லீக் செயலாளர் ஜே.எம்.ஜௌஸி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றி பெற்ற அணிகள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள், பணப்பரிசுகள், விசேட விருதுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.































Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال