(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபக தலைவர்,முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வு, "தோப்பாகிய தனிமரம்" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன் போது, நினைவுப் பேருரையை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் நிகழ்த்துவதோடு, அதிதி உரையை இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ்கனி ஆற்றவுள்ளார்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய மனப்பதிவுகள் குறித்து கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரை நிகழ்த்துவார்.
சிறப்பு அம்சங்களோடு, மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தொடர்பான ஆவணப் படமொன்றும் காண்பிக்கப்படும்.
உள்நாட்டு ,வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட, நாடெங்கிலுமிருந்து பெருந் திரளானோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னதாக, அதே தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது பேராளர் மாநாடும் அங்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
