நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் பாதுகாக்கப்பட்டுவந்த முஸ்லிம்களின் உரிமைகள் அநுரகுமார ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் மறுக்கப்பட்டு வருகின்றன. அதனால் அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் இதற்கு அனுமதிக்கக்க்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு சுதந்திரமடைந்து முதலாவது அமைச்சரவையில் இருந்து 2024ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சரவை வரைக்கும் முஸ்லிம் ஒருவரேனும் அதில் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறது. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையிலே முதல்தடவையாக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு திறமையான முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்தில் இல்லை என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பிக்களில் அதிகமானவர்கள் பல்வேறு துறைகளில் பட்டதாரிகளாக இருக்கிறார்கள்.
அதேநேரம் அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களில் சிலர் பாடசாலைக்கு செல்லாத, சாதாரண, உயர்தர பரீட்சை எழுதாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தில் திறமையான மூன்று மொழிகளும் நன்கு பரீட்சயம் உள்ள முஸ்லிம் எம்.பி்க்கள் இருக்கிறார்கள். அவர்களை அமைச்சர்களாக நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. இது கடந்த 80 வருட காலமாக முஸ்லிம்கள் அனுபவித்துவந்த உரிமையாகும். அது தற்போது மறுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று நாட்டில் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுக்களின் அதிகமானவற்றுக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு ஒரு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படாமல் இருக்கிறது. எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆரம்ப காலத்தில் இருந்து இருந்துவரும் ஆணைக்குழுவாகும். இதில் 3 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் தொடர்ந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அரசாங்கத்திலே அது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவுக்கு நியமிக்கப்பட தகுதியான பல முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைவிடவும் அனுபவமும் திறமையும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது எமது உரிமை. அப்படியிருக்கையில் போலி காரணங்களை தெரிவித்து, இதனை புறக்கணிக்க இடமளிக்க முடியாது.
எமது உரிமையை பற்றி பேசும்போது, அதனை இனவாதம் என சிலர் தெரிவிக்க முற்படுகிறார்கள். நாங்கள் இனவாதம் பேசவில்லை. ஒரு இனத்தின் உரிமையை பெற்றுக்கொள்வதற்காக குரல்கொடுப்பது இனவாதம் அல்ல. அது எங்களது உரிமை. அதனால் அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள், தங்களுக்கு அமைச்சுப்பதவி தேவையில்லை என தெரிவித்து, எமது உரிமையை விட்டுக்கொடுத்தால், அடுத்துவரும் அரசாங்கங்கள் தங்களது அமைச்சரவையிலும் ஆணைக்குழுக்களுக்கும் முஸ்லிம்கள் யாரையும் நியமிக்காமல் தங்களுக்கு தேவையான வகையில் தீர்மானங்களை எடுக்கும் நிலை ஏற்படும். அதற்கு இந்த அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் வழிவகுக்க கூடாது என்றார்.
