எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை உறுப்பினர்களுக்கும், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகச் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான கலந்துரையாடல் சனிக்கிழமை (22), இரவு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெரிய பள்ளி நிர்வாக சபைக்கு ஜம்இய்யா தமது வாழ்த்து செய்தியை தெரிவித்துக்கொண்டது.
இந்த சிநேகபூர்வ சந்திப்பின்போது, புத்தளம் சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, பல்வேறு சமூக சேவைகள் மற்றும் இஸ்லாமியப் பணிகளை இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
எதிர்வரும் காலங்களில் புத்தளம் முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், சமூகத்திற்கு பயனளிக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை கூட்டாக மேற்கொள்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இதன்போது, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகச் சபையின் தலைவர் ஆசிரியர் எஸ்.ஆர்.எம். சலீம் அவர்களை கௌரவிக்கும் வகையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை உறுப்பினர்கள் சார்பாக, அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அல்-மிஸ்பாஹியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகச் சபைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்கள் மூலம் புத்தளம் சமூகத்திற்கு பல்வேறு நன்மையான சேவைகளை முன்னெடுப்பதற்கும், சமூகத்தின் மார்க்க, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாகப் பாடுபடுவதற்கும் தேவையான ஆரோக்கியம், ஆற்றல், நேரங்களை இறைவன் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கப்பட்டது.







