JobVibe.lk - Sri Lanka Job Portal

மருத்துவர் தாஸிம் அஹமது இஸ்லாமிய -தமிழ் இலக்கிய பரப்பில் ஆற்றிய பணிகள் அளப்பரியது - அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மருத்துவத் துறைக்கு அப்பால்,தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்திருந்த மறைந்த வைத்திய கலாநிதி தாஸிம் அஹமது  இஸ்லாமிய தமிழ் இலக்கிய பரப்பில் ஆற்றிய பணிகள் அளப்பரியன என அவரது மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறந்த கவிஞரும்,சிறுகதை எழுத்தாளரும்,கட்டுரையாளருமான வைத்திய கலாநிதி  தாஸிம் அஹமது (டாக்டர் ஏ.எல்.கே. தாஸிம்)இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலைடைந்தேன். 

மருத்துவத் துறைக்கு அப்பால்,தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்திருந்த அவர்  இஸ்லாமிய தமிழ் இலக்கிய பரப்பில் ஆற்றிய பணிகள் அளப்பரியன. வகவம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவராக விளங்கிய அவர் ,கொழும்பு தமிழ் சங்கம் போன்றவற்றோடும் நெடுகிலும் தொடர்புபட்டிருந்தார்.

நான்  முன்னர் அமைச்சராக பதவி வகித்த ஆரம்ப காலத்தில், அரச அனுசரணையுடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு விமர்சையாக நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்த ஒருவராக நாங்கள் அவரைக் கண்டோம். அத்துடன் எங்கள் ஒத்துழைப்புடன் மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய  மாநாட்டின் வெற்றிக்கும் அவர் பெரிதும் உதவினார்.

தமிழகத்தை பொறுத்தவரையிலும் கூட, இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் அவரது ஆக்கமும்,ஊக்கமும் மறக்க முடியாதவை. இறுதியாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்  ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்த போதிலும் கூட, சுகவீனம் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

இளமையிலிருந்தே எங்களது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகப் பெருந் தலைவர்,முன்னாள் அமைச்சர்  எம். எச் .எம் .அஷ்ரப்பின்  நெருங்கிய நண்பராக அவர் இருந்தது மட்டுமல்ல, கொழும்பில் கற்ற காலத்தில் அவர்கள் அறை தோழர்கள் ஆகவும் நட்பை தொடர்ந்திருக்கிறார்கள் .அதை பற்றி  அவர்  சிலாகித்துக் கூறுவதுண்டு. 

மர்ஹூம் தாஸிம் அஹமது அவர்களை  அல்லாஹ் பொருந்திக் கொண்டு ,அன்னாருக்கு  ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை அருள்வானாக; அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் மனைவி, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மன ஆறுதலை அளிப்பானாக.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال