1980 மத்தியில் முஸ்லிம் அரசியலானது தனித்துவத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் போராட்ட தமிழ் இயக்கங்களின் பக்கம் ஈர்க்கப்பட்டதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அப்போது யாழ்ப்பாணம் கல்விக்கு பெயர்பெற்ற இடமாக இருந்தது. கிழக்கில் உள்ள முஸ்லிம் பெற்றார்கள் தங்களது பிள்ளைகளை கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருந்தபோது, பிள்ளைகள் கற்பதற்கு பதிலாக தமிழ் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு போராளி இயக்கங்களில் இணைந்து பயிற்சி பெற்றனர்.
EPRLF இயக்கத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் கணிசமான முஸ்லிம் ஆதரவு இருந்தது. அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் அவ்வியக்கத்தில் இணைந்ததுதான் அதற்கு காரணமாகும். 1983 க்கு பின்பு TELO வும் அம்பாறை மாவட்டத்தில் முக்கிய இயக்கமாக மாறியது.
ஆனாலும் முதன் முதலில் முஸ்லிம் இளைஞர்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டது EROS இயக்கமாகும். EROS பெரும்பாலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தனது ஆதரவை வளர்த்தது.
முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் அவர்கள் EROS இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினர். அவர் Senior Intelligence Leader ஆகவும், பின்னர் Politburo உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
1989 பாராளுமன்றத் தேர்தலில் பஷீர் சேகுதாவூத் EROS சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். Azhaghu Gunaseelan என்பவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்பு அவரது இடத்துக்கு வஷீர் சேகுதாவூத் EROS இயக்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
போராட்ட இயக்கங்களில் இணைகின்ற போராளிகளை சொந்த பெயர்கொண்டு அழைப்பதில்லை. பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயக்க பெயர் கொண்டுதான் அழைக்கப்பட்டார்கள்.
அந்தவகையில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களுக்கு தமிழ் பெயர்கள் வழங்கப்பட்டதுடன், பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருந்தது. அதுபோல் தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம் பெயர்களும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் போரில் உயிரிழந்த முஸ்லிம் போராளிகளை துல்லியமாக அடையாளப்படுத்துவது கடினமாகும்.
"எங்களைப்போன்று தமிழ் பேசுகின்ற சகோதர சமூகம் உரிமைப் போராட்டத்தில் இறங்கியுள்ளதனால், நாங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும், முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்" என்ற மனப்பக்குவம் சில முஸ்லிம்களிடம் அப்போது இருந்ததுதான் முஸ்லிம் இளைஞர்கள் அதிகமாக இயக்கங்களில் இணைவதற்கு காரணமாகும்.
போராளிகள் காடுகளில் முகாமிட்டுக்கொண்டு இருந்தாலும், நகரங்கள், கிராமங்களில் இருந்தவர்களுக்கு முஸ்லிம்களின் இல்லங்கள் அவ்வப்போது பாதுகாப்பான அடைக்களமாக இருந்தது.
அப்போது தமிழ் கிராமங்களும், நகரங்களும் அரச படையினர்களினால் திடீர் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடைபெறும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள ஊர்களில் முஸ்லிம்களின் இல்லத்தில்தான் தஞ்சமடைவார்கள். பின்பு சுற்றிவளைப்பு முடிந்ததும் போராளிகள் சென்றுவிடுவார்கள். இவ்வாறு போராளிகள் மயிரிழையில் உயிர் தப்பிய சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளது.
அவ்வாறு போராளிகளுக்கு அடைக்களம் வழங்கியதனால் படையினரிடம் அகப்பட்டுக் கொண்ட முஸ்லிம்கள் ஏராளம்.
மேலும், முஸ்லிம் தாய்மார்களின் உணவுகளை போராளிகள் விரும்பி உண்பார்கள். “அக்கா இண்டைக்கு இருபது பார்சல் வேணும், அக்கா இண்டைக்கு பதினைந்து பார்சல் வேணும்” என்றெல்லாம் உரிமையுடன் போராளிகள் உணவுகளை கோருகின்றபோதெல்லாம், எந்தவித சஞ்சலமுமின்றி முஸ்லிம் தாய்மார்கள் அப்போது இயக்க உறுப்பினர்களுக்கு உணவு சமைத்து பார்சல் கட்டிக் கொடுத்தார்கள்.
தொடரும்.........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
