JobVibe.lk - Sri Lanka Job Portal

ஏத்தாளையில் போதைப்பொருள் அற்ற சமூக உருவாக்கத்திற்கு பொலிஸாருடன் ஒன்றிணைந்த பொது மக்கள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஏத்தாளை கிராம சேவகர் பிரிவை போதைப் பொருள் அற்ற கிராமமாக உருவாக்கும் நோக்கோடு அப்பகுதி பொது மக்களின் அழைப்பின் பேரில் விசேட விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ் சுசந்த தலைமையில் வியாழக்கிழமை (20) ஏத்தாளையில் நடைபெற்றது

இதில் போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது மற்றும் போக்குவரத்து சட்டங்களைப் பின்பற்றுவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருளிலிருந்து சிறுவர்களையும் இளைஞர் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக, மக்கள் ஒன்றிணைந்து பொலிஸாருடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் இதன் போது  தெளிவூட்டப்பட்டது..அத்தோடு சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் பெற்றோரின் பொறுப்பு, குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துதல் மற்றும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் தொடர்பாக  உடனடியாக அறிவிப்பதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.

போக்குவரத்து சட்டங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், வீதி விதிகளைப் பின்பற்றுதல், சாரதிகளின் பொறுப்பு மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்புப் பிரிவினர் தினசரி சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், நல்லெண்ணம் கொண்ட பொதுமக்கள் பொலிஸாருடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் போதையற்ற சிறந்த கற்பிட்டியை உருவாக்க முடியும் எனவும் அந்த  நோக்கத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருளுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல் சட்டத்தின்படி பொலிஸார் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், கற்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பத்திரண, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மதுசங்க, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.எம் மல்ஹார் மௌலவி, கற்பிட்டி பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகாரி,  கற்பிட்டி சுகாதாரப் பிரிவின் பிரதேச பொறுப்பதிகாரி, குடும்ப சுகாதார உத்தியோகத்தர் மற்றும் அரச அதிகாரிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال