பாராளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஓர் மேடையை அமைத்துள்ளது பற்றி பலவிதமான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றது.
நாய் ஒன்றினை முன்னிலைப்படுத்தி தமிழ் – முஸ்லிம் சமூகத்துக்குள் பகைமையை ஏற்படுத்த சிலர் முயற்சித்தமை. அதனால் சமூக வலைத்தளங்களில் வசைபாடல்கள் ஏற்பட்ட இன்றைய சந்தர்ப்பத்தில் இவ்வாறு தமிழ் – முஸ்லிம் தலைவர்கள் ஒன்றினைவது ஆரோக்கியமானதாகும்.
தலைவர்கள் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே என்பார்கள். தலைவர்களும், கட்சிகளும் பிரிகின்றபோதுதான் சமூகத்துக்குள்ளும், சமூகங்களுக்கு இடையிலும் பிரிவினைகள் ஏற்படுகின்றது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் வெவ்வேறு கொள்கைகள் உள்ளது. அதாவது அனைத்து கட்சிகளும் ஒரே கொள்கையில் பயனிப்பவையல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்றரீதியில் ஒன்றுபடுவதனை விமர்சிப்பது நல்லதல்ல.
அரசியல் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வுகள் ஏற்பட்டாலும், அதன் ஆயுள் குறைவானது என்பதனை நாங்கள் அறியாத ஒன்றல்ல. எத்தனையோ கட்சிகள் கூட்டணி அமைத்து பின்பு பிரிந்ததெல்லாம் கடந்தகால வரலாறுகள்.
இங்கே ஒன்றிணைந்துள்ள ஆறு தமிழ் பேசுகின்ற சிறுபான்மைக் கட்சிகளுக்கு இடையில் வேறுபட்ட கொள்கைகள் காணப்படுகின்றது. தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளது.
தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தனித்து நின்று இயங்குவதனைவிட, தங்களது பலத்தினை காண்பிக்கும்பொருட்டு கூட்டாக இயங்குவதன் மூலம் தீர்வினை பெற முடியும் என்று கூறுகின்றார்கள்.
குறிப்பாக காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் விடயம் பற்றியும் கூறப்பட்டது. ஆனாலும் இது தேர்தல் கூட்டணியல்ல என்பதனை அறியக்கூடியதாகவும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
