JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் வீதியோர வியாபாரங்களுக்கு தடை.! 31 ஆம் திகதி முதல் அமுல்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சந்தையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ. லசந்த களுவாராச்சி, போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.ஆர். விஐயரட்ன, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச். றிஸ்வின், கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்ஸன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உட்பட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சந்தை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுச் சந்தையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு, தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக சந்தை அமைந்துள்ள வீதிகளில் அங்காடி வியாபார செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வாகனப் போக்குவரத்துகளுக்கும் நுகர்வோருக்கும் பாரிய இடையூறு ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பலரும் மாநகர சபையை வலியுறுத்தி வருகின்றனர் எனவும் மாநகர சபையானது உரிய நடவடிக்கை எடுக்க முற்பட்டால் உங்களது வியாபாரங்கள் முற்றாக முடங்கிப்போகும் அபாயம் காணப்படுவதுடன் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் என்பதால் நீங்களாக வீதியோரங்களில் வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதை முற்றாக தவிர்ந்து கொள்வதற்கு சந்தை வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதெனவும் இக்காலப் பகுதிக்குள் வீதியோரங்களில் உள்ள அங்காடி வியாபாரங்கள் யாவும் சந்தைப் பகுதிக்கு நகர்த்தப்பட வேண்டும் எனவும் வர்த்தகர்களின் இணக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சந்தையின் சுற்றுச்சூழலில் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநகர சபை மற்றும் சந்தை வர்த்தக சங்கம் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை சந்தையின் சுமூகமான செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு சந்தை இயங்கும் நேரத்தில் பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு சந்தை வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை நிலத்தில் படங்கு விரித்தோ குறைந்த உயரத்தில் வைத்தோ நுகர்வோருக்கு விற்பதை முற்றாக தவிர்த்து, 03 அடி உயரமான தட்டிகளில் வைத்தே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி றிஸ்வின் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

மேலும், கல்முனை மாநகர சபையின் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்ற வர்த்தகர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், சந்தையின் இரவு நேரப் பாதுகாப்பு, மலசல கூடங்களை தொடர்ச்சியாக துப்பரவு செய்தல், கடையறைகளின் திருத்த வேலைகளை முன்னெடுத்தல் உட்பட வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பிலும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் இதன்போது அவதானம் செலுத்தினார்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال