JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி புதிய அமீர் (தலைவர்)

கண்டி, 27 ஜூன் 2026 – இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் (SLJI) 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அங்கத்தவர் மாநாடு (NMC) 2026 ஜூன் 27 சனிக்கிழமையன்று கண்டி, பொல்கொல்லவில் உள்ள NICD கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், அமைப்பின் 9வது தலைவராக **சட்டத்தரணி அஷ்-ஷைக் ஜமால்தீன் முஹம்மத் அஷ்ரப் (நளீமி)** தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்களை நிறைவு செய்த உஸ்தாத் முஹம்மத் உஸைர் இஸ்லாஹி அவர்களுக்குப் பின் இப்பொறுப்பை ஏற்கிறார்

அக்குரணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி அஷ்-ஷைக் ஜமால்தீன் முஹம்மத் அஷ்ரப் (நளீமி), தனது ஆரம்பக் கல்வியை மாத்தளை சாஹிரா கல்லூரியில் பொதுக் கல்வித் தராதரப் பத்திரம் (சாதாரண தரம்) வரை பயின்றார். பின்னர், 1990 இல் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் இணைந்து, அரபு மொழி மற்றும் இஸ்லாமிய ஷரீஆ துறைகளில் கல்வி கற்று 1997 இல் பட்டதாரியானார்.

அதனைத் தொடர்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை (LL.B.) பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (M.A.) பட்டத்தையும் பெற்ற அவர், தற்போது ஒரு சட்டத்தரணியாகப் பணியாற்றி வருகிறார்.

அஷ்-ஷைக் ஜமால்தீன் முஹம்மத் அஷ்ரப் 2001 ஆம் ஆண்டில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியில் இணைந்தார். அமைப்பின் மத்திய பிராந்தியத் தலைவராகப் பணியாற்றியதுடன், அதன் மத்திய கலந்தாலோசனைச் சபை (மஜ்லிஸுஷ் ஷூரா) மற்றும் நிறைவேற்றுச் சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் எட்டு ஆண்டுகள் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவராகப் பதவி வகித்தார். இக்காலப்பகுதியில், சமூக மேம்பாடு, சமூக சீர்திருத்தம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்குத் தலைமை தாங்கி, அமைப்பின் மார்க்க, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமிக்கு அப்பால், அவர் அக்குரணை ஜமிய்யத்துல் உலமாவின் ஆலோசனைச் சபை உறுப்பினராகப் பல ஆண்டுகள் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். மேலும், அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவின் (ACJU) மத்திய குழு உறுப்பினராகவும், வக்ஃப் சபையின் (Waqf Board) உறுப்பினராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

2017-2018 காலப்பகுதியில், அக்குரணை பள்ளிவாசல்கள் ஒன்றியம் மற்றும் அக்குரணை ஜமிய்யத்துல் உலமா ஆகியன இணைந்து உருவாக்கிய "சமாதானக் குழுவின்" தலைவராகப் பணியாற்றி, இன நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

மலேசியா, துருக்கி, கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல சர்வதேச இஸ்லாமிய மாநாடுகளில் பங்கேற்றுள்ள அவர், இஸ்லாமிய சிந்தனை, சமூக மேம்பாடு மற்றும் நிறுவனத் தலைமைத்துவம் ஆகியவற்றின் சமகாலப் போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

1954 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மார்க்க வழிகாட்டல், கல்வி, சமூக நலன்புரி, மனிதாபிமானப் பணிகள், இளைஞர் மற்றும் மகளிர் மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றின் ஊடாக நாட்டிற்குச் சேவையாற்றி வருகிறது. இலங்கையில் அமைதியான சகவாழ்வு, தேசிய ஒற்றுமை மற்றும் அனைத்து சமூகங்களின் நல்வாழ்வையும் வளர்ப்பதில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال