(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் புதன்கிழமை (24) இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இருப்பு கைப்பற்றப்பட்டன.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான வசபவால் நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஆறு (06) பைகள் பரிசோதிக்கப்பட்டன. சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஐநூறு (500) பொட்டலங்கள் வெளிநாட்டு சிகரெட்டுகள், இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது (2295) பொட்டலங்கள் பூச்சிக்கொல்லிகள், இரண்டாயிரத்து ஐநூற்று அறுபத்தொன்பது (2569) பொட்டலங்கள் மருத்துவ களிம்புகள், நூற்று அறுபத்தைந்து (165) பொட்டலங்கள், அழகுசாதனப் பொருட்கள் அறுபத்து நான்கு (64) போத்தல்கள் மற்றும் வாசனை திரவியங்களை கடற்படை கைப்பற்றியது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பைக் கண்காணித்து, ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.






