இலங்கையில், இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின் அனுசரணையில் ஹிஜ்ரி- 1447 வருட இப்தார் திட்டம் அங்குரார்ப்பணம்..!
(எஸ். சினீஸ் கான்)
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் முனீர் முலப்பர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி உட்பட பல உலமாக்கள், பல்கலைக்கழக மற்றும் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, இலங்கைக் குடியரசில் 1447 ஹிஜ்ரி ஆண்டிற்காக, சவூதி அரேபியாவின் இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரின் அனுசரணையில் இந்த வருடம் முன்னெடுக்கப்படவுள்ள இப்தார் திட்டம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவின் புது டில்லியிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் மத இணைப்பாளரும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதேவேளை, 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் குர்ஆன் போட்டியில் பங்கேற்றவர்களும் இந்த இப்தார் நிகழ்வில் விசேட விருந்தினர்களாக பங்கேற்றனர்.












No comments