JobVibe.lk - Sri Lanka Job Portal

தஞ்சாவூர் பட்டமளிப்பு விழாவில், அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. பங்கேற்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18 ஆம், 19 ஆம் மற்றும் 20 ஆம் பட்டமளிப்பு  வைபவம், (14) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


பிரஸ்தாப கல்லூரியின் கல்வி குழுமத்தின் போஷகர் எம். ஏ. தாவூத் பாட்ஷா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரியின் முதல்வர் எம். முகமது முகைதீன் வரவேற்புரையாற்றியதோடு, முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான பேராசிரியர் கே .எம். காதர் முகைதீன், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர்  கலந்து கொண்டு 717 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.


பெண்கள் ஒரு காலத்தில் உயர் கல்வி கற்க தயக்கம் காட்டியதையும், தற்போது பெண்கள் பல்வேறு துறைகளிலும் பட்டங்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் பெற்று  முதல் நிலைக்கு வந்துள்ளதையும் மையப்படுத்தியதாக அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.


இவ்விழாவில் கல்லூரியின் துணைத் தலைவர் ரபியா பேகம், நிர்வாகத் துணை இயக்குனர் டாக்டர் சையத் ஹுசைன், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அப்ரோசா சுல்தானா ஆகியோர் பட்டதாரி மாணவிகளைப் பாராட்டிப் பேசினர்.  துணை முதல்வர் முனைவர் சி. தங்கமலர்  உறுதிமொழியை வாசிக்க, பட்டதாரிகள் அந்தப் பட்டமளிப்பு உறுதிமொழியை ஒப்புவித்தனர். 


வெகு விமர்சையாக நடைபெற்ற இவ்விழாவில், கல்வி குழுமத்தின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال