JobVibe.lk - Sri Lanka Job Portal

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புக்களை திட்டமிட்ட முறையில் விநியோகிக்கவும் - ஜனாதிபதி பணிப்புரை

• நிதி அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டம்...

• வழங்குனர்களுடனான நீண்ட கால ஒப்பந்தங்களில் கவனம் செலுத்த நடவடிக்கை ...

தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வழங்குனர்களுடனான நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலா பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போதுள்ள எரிவாயு கையிருப்புக்களை முறையாக விநியோகிப்பதற்கும் போதுமான எரிவாயு கொள்ளளவை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன ஆகியோருடன் பாதுகாப்பு, எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு தொடர்பான நிறுவனங்களின் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال