JobVibe.lk - Sri Lanka Job Portal

அரசியல் காழ்ப்புணர்ச்சி வேண்டாம்.!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட மிலேசத்தனமான கொடூரமிக்க தற்கொலைக் குண்டுத்  தாக்குதலின் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களையும்  நாம் அறிவோம்.

ஓர் உயிர் பறிக்கப்பட்டது மட்டுமின்றி, முஸ்லிம்களின் பல  கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான உடைமைகள், பள்ளிவாசல்கள் நாசமாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த நிலையில், நிர்க்கத்தியான நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ள குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்தல்  மற்றும் அவர்களுக்கு  நஷ்டயீடுகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அண்மைக்கால அசாதாரண நிலைமைகளில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நிரபராதிகளான அல்லது அப்பாவிகளான முஸ்லிம்களை  விடுவிப்பதற்கான முயற்சியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுள்ளது.

தங்களது   கட்சிப் பணிகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு  இந்த விடயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திச் செயற்படுகிறது. இதற்காக கட்சியின் தலைவர் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும். எமது முழுமையான ஒத்துழைப்பையும் அவருக்கு வழங்க வேண்டும்.

 இன்று (25) காலை கட்சித்  தலைமையகத்துடன் வேறொரு தேவைக்காக நான்  தொடர்பு கொண்டபோது அவர்களுக்கு என்னுடன் பேசக் கூட நேரமில்லாத நிலைமையே காணப்பட்டது. சட்டத்தரணிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சித் தொடர்கள் என அனைவரும் ஒன்று கூடி இந்த விவகாரங்களில்  தங்களை அர்ப்பணித்தவர்களாக செயற்படுகிறார்கள் என்பதனை  என்னால் துல்லியமாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்ததது.

இதன் பின்னர்  கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் இரு சகோதரர்களான டாக்டர் ஏ.ஆர். ஏ ஹாபிஸ் மற்றும் ரவூப் ஹஸீர் ஆகிய இருவருடனும் நான்  தொலைபேசியில் பேசியபோது அவர்களும் கூட இந்தப் பணியில் தங்களை எவ்வாறு அர்ப்பணித்துச் செயற்படுகின்றனர் என்பதனைப் புரிந்து கொண்டேன்.

இவ்வாறான நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் இந்த பணிகள் தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது  மிக மோசமான செயலாகவே நான் கருதுகிறேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது அதன் தலைமத்துவமோ இந்த இரு விடயங்களையும் மையப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கவில்லை. அவர்கள் திரிகரண சுக்தியுடன் செயற்படுகின்றனர் என்பதனை இங்கு ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்தரப்பு அரசியல் செய்யும் எவராக இருந்தாலும் சரியே, இந்த விடயத்தில் முழங்காலுக்கு மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தேவையற்ற விமர்சனங்களையும் விசர்த்தனத்தையும்  தவிர்ததுக் கொள்வதே நல்லது. 

சிரேஷ்ட்ட ஊடகவியலாளர்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال