குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. ஐ. சமிந்த பத்திராஜ அவர்களையும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் திரு. எச்.எம்.ஜே.எம். ஹேரத் அவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிழக்கு மாகாண மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பாரிய அசௌகரியங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் குறித்த ஆணையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், கிழக்கு மாகாண மக்கள் இச்சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வகையில், குறித்த திணைக்களங்களின் பிராந்திய அலுவலகங்களை கிழக்கு மாகாணத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


