எம்.யூ.எம்.சனூன்
வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாடசாலையையும் சமூகத்தையும் ஒன்றிணைத்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதற்கான புத்தளம் மணல்குன்று பாடசாலையின், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் (20) பாடசாலை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருவாளர் எம்.எம். சனூஸ் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த கால அறிக்கைகளை அதன் செயலாளர் அக்ரம் வாசித்தார்கள். அவை முரண்பாடுகள் இன்றி பிரேரித்து ஆமோதிக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு அமைவாக, செயலாளர் உள்ளிட்ட புதிய சங்க அங்கத்தவர்கள் சபையோரின் ஏகமனதான ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டனர்.
பாடசாலைத் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுக்க, ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 'பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு' உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பான விளக்கங்களை ஆசிரியர் எம்.ஏ.எம்.எம். பஸீல் தெளிவு படுத்தினார்.
கடந்த கால நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான உத்தேச அபிவிருத்தி முன் மொழிவுகளும் பொருளாளர் சார்பாக உதவி அதிபர் இர்பான் ஆசிரியரால் முன்வைக்கப்பட்டன.
சமூக கலாசாரக் கூட்டுப் பொறுப்பின் அவசியம் குறித்து அதிபர் உரையாற்றியதுடன், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகளை உதவி அதிபர் ஷாமித் முஹம்மத் தெளிவுபடுத்தினார்.
இறுதியில் பிரதி அதிபர் திருமதி நஸாரியாவின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.





