JobVibe.lk - Sri Lanka Job Portal

கொடகே தேசிய கையெழுத்துப் பிரதி இலக்கியப் போட்டியில் மருதமுனை எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸா முதலிடம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸா, கொடகே நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேசிய கையெழுத்துப் பிரதி இலக்கியப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று மருதமுனைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் எழுதிய ‘பரிசு பெற்ற சிறுகதைகள்’ என்ற கையெழுத்துப் பிரதியே இச்சாதனைக்குச் சொந்தமானது. இந்நூல் கொடகே சர்வதேசப் பதிப்பகத்தினால் வெளியிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் அனைத்துச் சிறுகதைகளும் ஏற்கனவே பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் விருதுகளையும் வென்றவையாக அமைந்திருப்பது இந்நூலின் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பம்சமாகும்.

இத்தகைய தனித்துவமான சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளிவருவது இதுவே முதல் தடவை என்ற சிறப்பையும் ‘பரிசு பெற்ற சிறுகதைகள்’ தனதாக்கிக் கொள்கிறது.

2021 முதல் 2026 வரையான காலப்பகுதியில் இவர் எழுதிய சிறுகதைகள் பல்வேறு பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச இலக்கியப் போட்டிகளில் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக, துபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்திய போட்டிகளில் இவரது ஆறு சிறுகதைகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கிய மற்றும் கலைத்துறைப் பங்களிப்புகளுக்காக 2024ஆம் ஆண்டு சிலோன் மீடியா போரத்தின் ‘சிறந்த பெண் ஆளுமை’ விருதும், இலங்கை அரசாங்கத்தின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் ‘கலைஞர் சுவதம்’ விருதும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 2026ஆம் ஆண்டு தினச்சுடர் தேசியப் பத்திரிகையின் ‘பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர்’ தேசிய விருதையும், கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘இளங்கலைஞர் விருதையும்’ பெற்றுள்ளார்.

2025ஆம் ஆண்டு இந்தியாவின் திருச்சியில் நடைபெற்ற உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இலங்கை சார்பான பேராளராகப் பங்கேற்று, சர்வதேசத் தமிழ் இலக்கிய அரங்கிலும் தனது பங்களிப்பைப் பதிவு செய்துள்ளார்.

பெண்களின் வாழ்வியல் நெருக்கடிகள், மலையக மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள், இளம் விதவைகளின் தனிமை, முதிர்கன்னிகளின் மனவலிகள், இளைய தலைமுறையினரின் சவால்கள், வறுமை, சமூக ஊடகங்களின் தாக்கம், முதிய பெற்றோரின் புறக்கணிப்பு, பாலஸ்தீன மக்களின் அவலங்கள் எனப் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை இவரது எழுத்துகள் ஆழமாகப் பேசுகின்றன. சமூகத்தின் விளிம்புநிலை அனுபவங்களையும் பேசப்படாத வலிகளையும் இலக்கியத்தின் வழியே வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இவரது எழுத்துகளின் தனித்துவமாகும்.

மருதமுனையின் இலக்கிய அடையாளத்தை தேசிய அளவில் மேலும் உயர்த்தியுள்ள இச்சாதனை, அவரது தொடர்ச்சியான இலக்கிய உழைப்புக்குக் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாகும்.

விரைவில் நூல் வடிவம் பெறவுள்ள ‘பரிசு பெற்ற சிறுகதைகள்’ இலக்கிய உலகில் புதிய வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எழுத்தாளர் சுமைய்யா ஜெஸ்மி மூஸாவின் இலக்கியப் பயணம் மேலும் பல உயரங்களைத் தொட இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال