(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் தரம் 8 மற்றும் 9 மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை (Media Workshop) ஒன்று ஞாயிற்றுக்கிழமை (04), அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் நஜீமின் வழிகாட்டலில், பொறுப்பாசிரியர் திரு. உமாயூனின் மேற்பார்வையில் ஊடகவியலாளர் பக்ருதீனால் இப்பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்த மாணவர்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
எதிர்கால சமூகத்தில் திறமையான ஊடகவியலாளர்கள், சிறந்த தொகுப்பாளர்கள் மற்றும் பொறுப்புணர்வுள்ள ஊடகப் பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், இவ்வாறான பயிற்சித் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
புத்தளத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இவ்வாறான ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை தொடர்ச்சியாக நடத்துவதுடன், புத்தளத்தில் உள்ள அனைத்து மத்ரஸாக்களிலும் இத்தகைய பயனுள்ள பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய மாணவர்களே நாளைய சமூகத்தின் வழிகாட்டிகளாகவும், அறிவார்ந்த ஊடகப் பணியாளர்களாகவும் உருவாக வேண்டும் என்பதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும்.


