எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு மூன்று வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் திங்கட்கிழமை (10) இடம்பெற்றன.
புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரத்மல்யாய, தில்லையடி மற்றும் சேனக்குடியிருப்பு ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலேயே இந்த வீட்டுதிட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தத் திட்டம் பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக வீடுகளைக் கட்ட முடியாத குடும்பங்களுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுப்பதுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவும் காணப்படும்.
இந்நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், மாநகர சபை உறுப்பினர்களான அனூஸா, சஹ்ரான் தாஜுதீன், புத்தளம் பிரதேச சபையின் ரத்மல்யாய வட்டார உறுப்பினரும், பிரஜா சக்தி தலைவருமான இஸ்ஸதீன் கியாஸ், புத்தளம் பிரதேச செயலாளர் விதானகே, புத்தளம் சமூர்த்தி வங்கியின் தலைமை முகாமையாளர், பாலாவி சமூர்த்தி வங்கியின் முகாமையாளர், புத்தளம் சமூர்த்தி வங்கியின் முகாமையாளர், குறித்த பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள், கிராம அரச உத்தியோகத்தர்கள், இத்திட்டத்தின் பயனாளிகள், மகளிர் சங்கங்களின் உறுப்பினர்கள், சிட்டி போய்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.












