JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- அரச சுற்றுநிருபத்தை மீறி கடமையேற்க விடாமல் தடுத்ததாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு

 நூருல் ஹுதா உமர் 

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக புதிதாக உள்வாங்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள், தங்களது கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோது உரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்வைத்து கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதுடன், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சுகாதார உதவியாளர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹீர் ஆகியோரின் பிரசன்னத்துடன் திங்கட்கிழமை (10) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்பதற்காக சமூகமளித்த சுகாதார உதவியாளர்கள், தங்களுக்குரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தைக் கூறி வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் குறித்த உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்பதிலிருந்தும், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதிலிருந்தும் தடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆகஸ்ட் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் குறித்த பெண் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோதும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியான அறையில் வைக்கப்பட்டதாகவும், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்கள் தங்களை நேரடியாக அணுகி சட்ட உதவியை கோரியதாகவும், அதன் அடிப்படையில் தானும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹீரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஸ்ரீசங்கர் மற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் ரஜீந்தர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாக சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் எம்.எம்.எம். முஅஸ்ஸம் தெரிவித்தார்.

வைத்தியசாலை மட்டத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாக இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், எனினும் அவ்வாறான முறையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போதுமான பொறிமுறை இல்லை என்பது கலந்துரையாடலின் பின்னர் தமக்குத் தெளிவானதாகவும் அவர் கூறினார்.

அதிகாரிகள், சுகாதார உதவியாளர்களின் ஆடை தொடர்பில் குறிப்பிட்ட சுற்றுநிருபம் இருப்பதாகவும், அதனை அவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

எனினும், 2019 ஜூன் 26ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றுநிருபம் 13/2019 தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சுற்றுநிருபத்தின் உப பிரிவு 4இல், மத ரீதியான ஆடை ஒழுங்குகளைப் பின்பற்றும் அரச உத்தியோகத்தர்கள், தங்களது மத அடையாளத்தைப் பேணுவதற்காக மேலதிக ஆடையொன்றைப் பயன்படுத்த முடியும் எனவும், அதேவேளை முகம் முழுமையாகத் தென்படும் வகையில் அவர்களைத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதன்படி, குறித்த பெண் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கான சீருடையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், அதற்கு மேலதிகமாக தங்களது மத அடையாளத்தைப் பேணுவதற்குத் தேவையான ஆடை ஒழுங்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கினார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபம் நடைமுறையில் இருக்கும்போது, அதனை மீறி சுகாதார உதவியாளர்களை கடமையேற்க விடாமல் தடுப்பது தொடர்பில் தீவிரமான கேள்விகள் எழுவதாகவும் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், ஒழுக்காற்றுப் பொறுப்புடைய வைத்திய அதிகாரி டாக்டர் ரஜீந்தர், சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வை அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் 05 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைப்பாடு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

நாட்டின் சட்டம், நீதி, ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் மீது தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீரியத்துடனும் வினைத்திறனுடனும் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என அவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்  மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் அல்லது விளக்கம் கோர ஊடகவியலாளர்கள் முற்வேளையில் அதற்கான வாய்ப்பை வைத்தியசாலை நிர்வாகம் வழங்க முன்வரவில்லை.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال