எம்.யூ.எம்.சனூன்
புத்தளம், மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் திறமைகளைப் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழா பாடசாலை வளாகத்தில் அதிபர் எம்.எம். சனூஸ் முஹம்மத் தலைமையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை வளாகத்தில் பொது வெளியில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதலாவது அம்சமாக மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையில் மாணவர் தலைவர்களாகப் பணியாற்றிய மாணவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி அதிபர் தலைமையில் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாடசாலையின் தரம் 9C இல் கல்வி பயிலும் மாணவி செல்வி பைசல் பாத்திமா சபாவின் சுய படைப்பான 'நிமிர்' எனும் கதைப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
மாணவியின் இலக்கியப் படைப்பாற்றலையும் எழுத்துத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்நூல் வெளியீடு, மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் ஆக்க இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 2026 ஆம் கல்வியாண்டிற்காக நடத்தப்பட்ட வகுப்பறை அலங்காரப் போட்டி நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற மற்றும் சிறந்த வகுப்பறைகள் தெரிவு செய்யப்பட்டு கேக் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
அடுத்த நிகழ்வாக, ஆங்கில மொழித் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆங்கிலப் பாட இணைப்பாளர் திருமதி புஹாத், ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், விழுது மேம்பாட்டு மையத்தினால் நடத்தப்பட்ட சிறந்த சமையலாளர் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள், இலக்கியப் படைப்பாற்றல், மொழித் திறன் மற்றும் நடைமுறைத் திறமைகளை ஒருங்கிணைத்து முன்னிலைப்படுத்திய இம்முப்பெரும் விழா, மாணவர்களின் பல்துறை ஆளுமை விருத்திக்கும் அவர்களது திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் சிறந்த களமாக அமைந்தது.
பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் சாதனைகளையும் ஆக்கத்திறன்களையும் பாராட்டி ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள நிகழ்வாக நிறைவடைந்தது.




















