JobVibe.lk - Sri Lanka Job Portal

தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு முஸ்லிம்களின் உதவி.

ஏழாவது தொடர்...........

தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகால வரலாற்றை ஆராயும்போது, அதில் முஸ்லிம்களின்  கணிசமான பங்களிப்பு இருந்தது. ஆனால் 1990 க்குப் பின்னர் தமிழ் – முஸ்லிம் இன முரண்பாடுகள் அதிகரித்ததன் பின்பு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிய பல உண்மைகள் மறைந்துள்ளது.   

ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சில முஸ்லிம் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு வழங்கிய பல்வேறு வகையான உதவிகளை இங்கே விபரித்துள்ளேன்.   

1. பாதுகாப்பான தங்குமிடம்: சில முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் போராளிகளை மறைத்து வைத்ததாகவும், அவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை ஏற்பாடு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. 

குறிப்பாக 1987–89 காலத்தில் இந்திய படையினர் மற்றும் அதன் ஆதரவு பெற்ற EPRLF, TELO, PLOTE, ENDLF ஆகிய இயக்கங்களின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிய LTTE உறுப்பினர்களுக்கு முஸ்லிம் பகுதிகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக இருந்தன. 

2. போராளிகளுக்கு உணவு வழங்குதல்: இது கெரில்லா போருக்கான அடிப்படை உதவியாகும். காடுகளில் அல்லது மறைவிடங்களில் இருந்த போராளிகளுக்கு சமைத்த உணவு, அரிசி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டமை.  

3. உள்ளூர் தகவல்: இது பண உதவியைவிட சில சமயங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. கிழக்கில் தமிழ் – முஸ்லிம் கிராமங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருந்தன. இதனால், இராணுவ ரோந்து, பாதுகாப்பான பாதை, திடீர் சோதனை, பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் போன்ற உள்ளூர் தகவல்கள் போராளிகளுக்கு பெறுமதியாக இருந்தது.   

4. போக்குவரத்து: வாகனங்கள் மூலம் போராளிகளை அல்லது அவர்களது பொருட்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லுவதற்காக மோட்டார் சைக்கிள், கார், வேன், லொறி, மாட்டு வண்டி, படகு போன்ற உள்ளூர் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தனர். 

5. பண உதவி: இதில் இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளது. அதாவது சுய விருப்பத்தில் நிதி வழங்குதல், கட்டாயமான கப்பம் கட்டுதல். 

6. காடுகள், கிராமப்புற தொடர்புகள்: சில முஸ்லிம்கள் காடுகளுக்குச் சென்று விறகு சேகரித்தல் மற்றும் சட்டவிரோத மரம் வெட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். அதே காடுகளில் LTTE உறுப்பினர்கள் மறைந்திருந்தனர். இதனால் காடுகளில் உள்ள பெறுமதியான மரங்கள் முஸ்லிம் வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டது.  

7. மனிதவள உதவி: சில முஸ்லிம் இளைஞர்கள் TELO, EROS, EPRLF, PLOTE, LTTE போன்ற இயக்கங்களில் நேரடியாக இணைந்து களத்தில் போர் புரிந்தனர்.  

அதாவது இயக்கத்துக்கு பணம் கொடுத்தல், ஆதரவு வழங்குதல் என்பதைவிட, தன்னுடைய வாழ்க்கையையே இயக்கத்திற்காக அர்ப்பணித்த முழுநேர போராளி. இது ஈழப் போராட்டத்துக்கான மிகப் பெரிய பங்களிப்பாகும். இதில் சிலர் போரில் கொல்லப்பட்டதும் இந்த வரலாற்றின் ஒரு பகுதியாகும்.

8. காயமடைந்த போராளிகளுக்கு உதவி: இது கெரில்லா தாக்குதலில் அல்லது போரில் காயமடைந்தவர்களுக்கு மறைவிடம், உணவு, அடிப்படை சிகிச்சை, மருத்துவமனைக்குச் செல்ல உதவி, மருந்து வாங்குதல் போன்ற உதவிகள். 

9. அரசியல் ஆதரவு:

இது மனிதவள, பொருளாதார உதவியிலிருந்து வேறுபட்டது. EROS 1975 லேயே கிழக்கு முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவினை உருவாக்க முயன்ற முதல் இயக்கமாகும். முஸ்லிம்களை இணைப்பதற்காக நான்கு அம்சத் திட்டத்தையும் அது உருவாக்கியிருந்தது. 

இதனால் ஆரம்பகாலத்தில் சில முஸ்லிம்கள் தமிழ் விடுதலை இயக்கத்தை தங்களுடைய மொழி உரிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டமாகவும் பார்த்திருக்க முடிந்தது.

மேலும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ் இயக்கங்களுக்கு பண உதவி செய்ததாகவும், அவ்வாறு செய்யாவிட்டால், வடகிழக்கில் அரசியல் செய்வது கடினம் என்பதற்காகவே மறைமுகமாக உதவியதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக அன்றைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை LTTE க்கு வழங்கியதாகவும் அவர்மேல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. 

அத்துடன் வன்னி பிரதேசத்திலும் பெருமளவான பண உதவிகளை வன்னியில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்ததாகவும் அப்போது செய்திகள் பரவலாக வெளியாகியது. 

10. முழு முஸ்லிம் சமூகமும் ஆதரவு வழங்கினார்களா ?  

பொதுவாக எந்தவொரு சமூகத்தின் ஒட்டுமொத்த மக்களும் அரசியலில் ஒரே நிலைப்பாட்டில் இருந்ததில்லை. LTTE யினருக்கு நூறுவீதமான தமிழர்களும் ஆதரவு வழங்கவில்லை. அதுபோலவே முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடும் இருந்தது. 

சிலர் தமிழ் இயக்கங்களை ஆதரித்தனர், இயக்கங்களில் சேர்ந்தனர், பண உதவி செய்தனர். ஆனால் இன்னும் சிலர் ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கும், UNP, SLFP, பொலிஸ், இராணுவம் போன்றவற்றுக்கு ஆதரவாக இருந்தனர். 

எனவே முஸ்லிம் சமூகம் தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவளித்தது என்பது ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவு வழங்கியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேநேரம், முஸ்லிம்களில் சிலர் தமிழ் இயக்கங்களுக்கு எதிராக இருந்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிரானது என்றும் கூறக்கூடாது.  

தொடரும்................

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال