பகற்கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா அவர்களுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷன் சார்பில் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பவுண்டேஷன் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பவுண்டேஷன் நிறுவுநரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இந்த நிதியுதவியை வழங்கி வைத்தார்.
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றில், அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வரான ஆஷிப் மௌலானா (தரம் 09) அவர்களின் வலது காலில் முறிவு ஏற்பட்டதையடுத்து, அவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டு வந்தார்.
இதன் காரணமாக, அஸ்லம் மௌலானாவும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளையில், பூட்டப்பட்டிருந்த அவர்களது வீட்டில் பகற்கொள்ளை இடம்பெற்றிருந்தது. சம்பவத்தில் மடிக்கணினி (Laptop), ஒரு தொகைப் பணம், இரண்டு பென்டிரைவ்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

