புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயம் கல்வி துறையில் மாத்திரமின்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பல தேசிய வெற்றி அடைவுகளை தற்போது அடைந்து வருகிறது.
இதுவரைகாலமும் தரம் 05 ஆரம்ப பிரிவில் இயங்கி வந்த நிலையில் இப்பாடசாலையின் அதிபராக அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்லார் (நளீமி) பொறுப்பேற்றதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு முதல் முறையாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் தோற்றினர்.
இதன் பெறுபேறுகளின் அடிப்படையில் 60% வீதமான மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்தனர்.
2025 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக க.பொ. த. சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் தோற்றி 83.4% வீத சித்தியை அடைந்து மேலும் பெருமையை சேர்த்தனர்.
புத்தளம் தெற்கு கோட்டத்தில் சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இப்பாடசாலை மூன்றாமிடத்தையும், தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இரண்டாமிடத்தையும், முஸ்லிம் பாடசாலைகளில் முதலாமிடத்தையும் க.பொ. த. சா/த பெறுபேறுகளின் அடிப்படையில் முன்னணி வகிக்கின்றது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கோட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்று குறுகிய காலத்தில் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து வருகின்றமை அப்பாடசாலையின் அதிபரின் அயராத முயற்சியின் பிரதிபலிப்பாகும்.
இதேவேளை இணைப்பாட விதான செயற்பாடுகளில் இப்பாடசாலை பல தேசிய வெற்றிகளை அடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
