தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம்களை துரும்பாக பாவிக்கும் கருணா. எதை மறைக்க முற்படுகின்றார் ? நோக்கம் என்ன ?
கருணா அம்மான் அவர்கள் தேர்தல் வெற்றிக்காக தமிழ் இளைஜர்களை எப்படியெல்லாம் கவர முடியுமோ அவ்வாறெல்லாம் கவர்வதற்காக முஸ்லிம் என்ற துரும்பை கையில் எடுத்துள்ளார்.
ஆயுதங்கள் ஏந்தியபோது 1990 காலங்களில் புலிகளின் பெயரால் இதே கருணா அம்மானின் உத்தரவிலேயே முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் புலிகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டதென்பது வரலாறு.
தளபதியாக இருந்து தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்துவிட்டு இன்று அரசியல்வாதியாக மாறினாலும், முஸ்லிம்களுக்கெதிரான மனோநிலை கருணாவிடமிருந்து இன்னும் மாறவில்லை.
அதாவது அன்று ஆயுதங்கள் மூலம் பேசிய கருணா, இன்று வார்த்தைகள் மூலம் பேசுகிறார். இவரது இன்றைய பிரச்சாரமானது தமிழ் இளைஜர்களின் உணர்வுகளை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டுவதாக அமைகின்றது.
1990 க்கு பின்பு பிறந்த தமிழ் முஸ்லிம் இளைஜர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் எந்தவித கசப்புனர்வுமில்லாமல் சகோதரர்களாக மிக நெருக்கமான உறவுகளை பேணிவருகின்ற இன்றைய காலகட்டத்தில், தனது தனிப்பட்ட அரசியலுக்காக மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் முயற்சியில் கருணா இறங்கியுள்ளார்.
இறுதி யுத்தத்தில் முள்ளியவாய்க்கால் வரைக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றுகுவித்த தரப்பினரை காதலித்துக்கொண்டு, நண்பர்களை எதிரிகளாகவும், எதிரிகளை நண்பர்களாகவும் தமிழ் மக்களுக்கு காண்பிக்கின்றார். இது கவலை தருகின்றது.
கருணா அவர்கள் பிரதி அமைச்சராகவும், சுதந்திர கட்சியின் பிரதி தலைவராகவும் உச்ச அதிகாரத்திலிருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்திகளோ, தொழில்வாய்ப்புக்களோ வழங்கவில்லை
அத்துடன் சிறைகளில் வாடுகின்ற தமிழ் இளைஜர்களை விடுதலை செய்யவோ, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவோ, தமிழர்களின் காணிகளை விடுவிக்கவோ கருணாவினால் முடியவில்லை. இதனை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்கறிவார்கள்.
இதனாலேயே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அறிந்துகொண்டதனால் புது மாப்பிள்ளை போன்று அம்பாறை மாவட்டத்துக்கு வருகைதந்து தமிழ் மக்கள் மத்தியில் விசம கருத்துக்களை விதைப்பதன்மூலம் தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து அதன்பின்பு தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள கருணா முயல்கிறார்.
அத்துடன், தமிழர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகி என்ற அவப்பெயரை மறைப்பதற்காகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கும் முஸ்லிம்கள்மீது விரல் நீட்டிக்கொண்டு பேரினவாதிகளின் முகவராகவே அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மன் களமிறங்கியுள்ளார்.
எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments