JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் தரம் 11 மாணவர்களுக்கான பெற்றோர், மாணவர் வழிகாட்டல் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன் 

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் தரம் 11 மாணவர்களுக்கான பெற்றோர், மாணவர் வழிகாட்டல் நிகழ்வு அண்மையில் கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ஐ.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 125 பெற்றோர்களும், 145 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் முக்கிய வளவாளராக கொழும்பு அமேசன் கெம்பஸ் பணிப்பாளரும், பிரபல உளவியல் நிபுணருமான கலாநிதி இல்ஹாம் மரிக்கார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். 

மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களின் இதயங்களைத் தொடும் வகையில் மிகவும் அழகானதும் அன்பானதுமான முறையில் உரையாற்றிய அவர், மாணவர்களின் கல்வி, எதிர்கால இலக்குகள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் தொடர்பாக சிறப்பான வழிகாட்டல்களை வழங்கினார்.

அவரது உரையாடல் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்ததுடன், மாணவர்கள் தங்களது இலக்குகளை தெளிவாக அடையாளம் கண்டு, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் ஏற்படுத்தியது. 

பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியில் எவ்வாறு சிறப்பாகப் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் பயனுள்ள ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை வலுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள், வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் கல்வி மற்றும் தனிநபர் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பானதுமான நிகழ்வாக அமைந்தது.

மாணவர்களின் எதிர்கால வெற்றிக்காக பாடசாலை நிர்வாகம் முன்னெடுத்து வரும் இத்தகைய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال